நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் கொண்ட அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. . இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இந்திய வீரர்கள் மொத்தமாக 11 முறை டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய மேடையில் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை ரன் ஏதுமின்றி இழப்பது கிரிக்கெட் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராகப் பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா, இந்தத் தொடரில் மோசமான ஃபார்மில் உள்ளார். தான் விளையாடிய முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து (0, 0, 0) மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து மற்ற முன்னணி வீரர்களும் சில போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறியது, இந்திய அணியை இந்த மோசமான பட்டியலில் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்தத் தொடரில் அதிக டக் அவுட் கொடுத்துள்ள டாப் அணிகளின் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி அணி 8 டக் அவுட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஓமான் அணி 7 முறையும், அண்டை நாடான பாகிஸ்தான் 6 முறையும், இலங்கை 8 முறையும் டக் அவுட் ஆகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதே வேளையில், இந்தத் தொடரில் இதுவரை ஒரு வீரர் கூட டக் அவுட் ஆகாத ஒரே அணியாக தென்னாப்பிரிக்கா பலம் வாய்ந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் நுழைந்துள்ள நிலையில், இந்த ‘டக் அவுட்’ சரிவிலிருந்து மீண்டு வருமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
