தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது வரலாறு காணாத வகையில் மக்கள் கூட்டம் திரண்டது. வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக அவர் வாகனத்தில் சென்றபோது, சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் அவரைக்காண முண்டியடித்தனர். இதனால் வேலூர் மாநகரமே மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போன்ற காட்சி உருவானதுடன், நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 4998 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான அனுமதி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள்ளும் இந்த வெளிநபர்கள் புகுந்ததால், கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது.
இந்தத் தேர்தல் வாகனப் பேரணியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலால், பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். கூட்ட நெரிசலில் சிக்கி ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரச்சார வாகனத்திற்கு மிக அருகில் செல்ல ரசிகர்கள் முயன்றதால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய சூழல் உருவானது. விஜய்யின் வருகையையொட்டி சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலும், கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதுகாப்புப் பணிகள் சவாலாக அமைந்தன.
