விஜய் ஹசாரே டிராபியில் இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் CSK வீரர் ராமகிருஷ்ணா கோஷ் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) எப்போதும் எதிர்காலத்தில் நட்சத்திரமாக மாறக்கூடிய திறன் கொண்ட வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீரர்தான் ராமகிருஷ்ண கோஷ். IPL 2025ல் அவர் CSKக்கு ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இருப்பினும், ஐபிஎல் 2026-க்கு முன்னதாக சிஎஸ்கே அவரைத் தக்கவைத்துக் கொண்டது. இப்போது, உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு, அந்த அணியின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ராமகிருஷ்ண கோஷ், இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசினார். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில், அவர் 9.4 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இமாச்சலப் பிரதேச பேட்ஸ்மேன்கள் திணறினர், மேலும் அந்த அணி முழுவதுமே நெருக்கடிக்கு உள்ளானது.
ராமகிருஷ்ணா கோஷின் செயல்திறன், விஜய் ஹசாரே ட்ரோபியின் வரலாற்றில் எந்த மகாராஷ்டிரா பவுலராலும் பெறப்படாத சிறந்த சாதனையாகும்.இதற்கு முன்பு, இந்தச் சாதனை டொமினிக் முத்துசாமி வசம் இருந்தது. அவர் 2014-ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது, கோஷ் ஒரு விக்கெட் கூடுதலாக வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார்.
ராமகிருஷ்ண கோஷ் ஒரு பந்துவீச்சாளர் மட்டுமல்ல, ஆல்-ரவுண்டரும் கூட. தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் 73 ரன்கள் எடுத்தார். கடினமான நேரங்களில் அணியை நிலைநிறுத்திய அவர், தனது பேட்டிங்கின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
28 வயதான ராமகிருஷ்ண கோஷ் தனது லிஸ்ட் ஏ கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். அவர் இதுவரை ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஆனால் அந்தப் போட்டிகளிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, 112 ரன்களையும் எடுத்துள்ளார். இந்த புள்ளிவிவரங்கள், அவருக்குக் கிடைக்கும் குறைந்த வாய்ப்புகளிலும்கூட தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது என்பதைக் காட்டுகின்றன.
