நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சு என்பது பேட்டிங்கிற்கு இணையாக கவர்ச்சிகரமான ஒரு துறையாகப் பார்க்கப்படுவதில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின், ரசிகர்கள் சிக்ஸர்களையும், பேட்டர்களின் அதிரடிகளையும் பார்ப்பதையே அதிகம் விரும்புவதால், வளரும் இளம் தலைமுறையினர் பந்துவீச்சை ஒரு விருப்பமான துறையாகத் தேர்ந்தெடுக்கத் தயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்காலத்தில் இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களின் தட்டுப்பாட்டை உருவாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ராவை “இந்தியாவின் தேசியப் பொக்கிஷம்” என்று வர்ணித்துள்ள அஸ்வின், அவர் ஒரு அபூர்வமான பந்துவீச்சாளர் என்றும், அவருக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பப்போவது யார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஒரு காலத்தில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் என வலுவான பந்துவீச்சுப் படை இருந்தது. ஆனால், தற்போது பும்ராவைத் தவிர்த்துப் பார்த்தால், சர்வதேசத் தரத்தில் போட்டிகளை வென்று தரும் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
