இந்திய பயணத்திற்காக லியோனல் மெஸ்ஸிக்கு ரூ.100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து வெகுவாக ஆடப்படும் நாடுகளுக்கு, ‘கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவில் கடந்த 13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

முதற்கட்டமாக கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி, ஏற்பாட்டாளர்களின் குளறுபடிகளால் பெரும் வன்முறையில் முடிந்தது. வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்த அவர், பின், ஐதராபாத் சென்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார். சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

அதன் பின் டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மெஸ்ஸி சென்ற இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சி ஆடையை அணிந்து வந்து பெருந்திரளாய், அவரை பார்த்து சென்றனர்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய முன்னாள் கால்பந்து அணி தலைவர் பைச்சுங் பூட்டியா உள்ளிட்ட பல பிரபலங்கள், மெஸ்ஸியை சந்தித்து அவருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

மெஸ்ஸி தன்னுடைய இந்திய பயணத்தில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான வந்தாராவிற்கு சென்றார். இந்தியாவில் உள்ள விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு முயற்சியான ‘வந்தாரா’விற்கு மெஸ்ஸி சென்றது, ஒரு வழக்கமான பிரபலத்தின் வருகையை விட பன்மடங்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

விளையாட்டு அரங்குகள் மற்றும் ஊடகங்களின் வெளிச்சத்தில் இருந்து விலகி, வந்தாரா மையத்தில் தன்னுடைய நேரத்தை செலவிட்ட மெஸ்ஸி சுயசிந்தனை, கலாச்சாரத்தில் ஒன்றிணைதல் மற்றும் விலங்கு நலனில் ஈடுபாடு போன்றவை குறித்து அறிந்து கொள்வதில் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்தநிலையில், மெஸ்ஸி இந்திய பயணத்துக்கு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் 11 கோடி ரூபாய் அரசிடம் வரியாக செலுத்தப்பட்டது. இதன் மூலம் அவரது வருகைக்கு மட்டும் 100 கோடி ரூபாய் ஆனது. இந்த பணத்தில் 30 சதவீதம் விளம்பரதாரர்கள் மூலமும், மேலும் 30 சதவீதம் டிக்கெட் கட்டணம் மூலமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, கடந்த 19 ம் தேதி சத்துரு தத்தாவின் வீட்டில் சோதனை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பல முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்தனர். அதில் அவரது வங்கிக்கணக்கில் 20 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணம், மெஸ்ஸியின் வருகைக்காக கோல்கட்டா மற்றும் ஐதராபாத் மைதானங்களில் டிக்கெட் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை என சத்துரு தத்தா தெரிவித்ததாக விசாரணை குழுவினர் கூறியுள்ளனர். இதனை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version