ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவும், துணைக்கேப்டனாக விஹான் மல்ஹோத்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் நமீபியா மற்றும் ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க உள்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் உள்ளனர்.
குரூப் சி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை அணிகளும், குரூப் டி பிரிவில் தான்சியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் இடம்பெற்றுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக அணியின் வழக்கமான கேப்டன் ஆயூஷ் மாத்ரே மற்றும் துணைக் கேப்டன் விஹான் மல்ஹோல்த்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், யுவராஜ் கோஹில், ராகுல் குமார் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அண்டர் 19 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே மற்றும் துணைக்கேப்டனாக விஹான் மல்ஹோல்த்ரா ஆகியோர் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யுவராஜ் கோஹில் மற்றும் ராகுல் குமார் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி: வைபவ் சூரியவன்ஷி (கேப்டன்), ஆரோன் ஜார்ஜ் (துணைக்கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல்,தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன், யுவராஜ் கோஹில், ராகுல் குமார்
அண்டர் 19 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணைக்கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன்.
