கோவையில் சரக்கு ஆட்டோமோதி 13 வயது பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர்கள் பாலன் -சாவித்ரி தம்பதி. சாவித்ரி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது 13-வது மகள் சௌமியா, கோவை செம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அதே பகுதியில் உள்ள அவரது பாட்டி சரோஜினி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார் சௌமியா.
வழக்கம் போல பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு சென்றவர், அங்கிருந்து தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ சிறுமி மீது மோதியது. அத்தோடு சிறுமியை சிறிது தூரம் இழுத்து சென்று அருகேயுள்ள கல்லில் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பெரியகடைவீதி போலிசார் சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியின் உடன் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.