சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் புளூகான் ராஜ்குமார். 37 வயதான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ள நிலையில் ’பி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விலகிய இவர், சாமியானா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

அதிமுகவிலும் நிர்வாகியாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் குடும்பத்துடன் டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி பிற்பகல் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது, அங்கு சுமார் 9 பேர் கையில் அரிவாளுடன் கூடியுள்ளனர். அவர்களில் 5 பேர் வீட்டிற்குள் புகுந்த போது, ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இருப்பினும் அவரை மடக்கி பிடித்த 5 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 6-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த யுவனேஷ் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவருடைய நண்பர்கள் இருவரும் 17 வயது மட்டுமே நிரம்பியவர்கள். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், யுவனேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

“நான் 2 வயது குழந்தையாக இருந்தபோது, எனது தந்தை செந்தில்குமார் அமைந்தகரையில் வைத்து கொலை செய்யப்பட்டார். அப்போது நான் ஒன்றும் அறியாத குழந்தை. தற்போது நான் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறேன். எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர்.

2 பேர் கொலை செய்யப்பட்டனர். எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ராஜ்குமாரும் ஒருவர். அவர் 2021-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலையானார்.

என்னை பொறுத்தமட்டில் எனது தந்தை கொலை செய்யப்பட்டதை பெரிதுப்படுத்தாமல் வாழ்ந்து வந்தேன். ஆனால் ராஜ்குமார் என்னை பார்க்கும் போதெல்லாம் உன் தந்தையை நான்தான் கொன்றேன் என்று எனது மனதில் பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி வந்தார். ராஜ்குமாரை பொறுத்தமட்டில் அவரது சாவை அவரே தேடிக்கொண்டார். அடிக்கடி என்னை சீண்டியதால் நானும், எனது நண்பர்களும் ராஜ்குமாரை போட்டுத்தள்ள முடிவு செய்தோம்.

இதற்கிடையில் ஒரு அடிதடி வழக்கில் போலீசார் என்னை சேர்த்துவிட்டனர். எனது தந்தை இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அவரை தீர்த்துக்கட்டிய ராஜ்குமாரை இப்போதுதான் தீர்த்துக்கட்டினேன். எனக்காக எனது நண்பர்களும், என்னுடன் இணைந்து இதனை செய்தார்கள்” என்று யுவனேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து யுவனேசும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். அத்தோடு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version