மதுரை மாநகராட்சியில் 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில், தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் மொத்தம் 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்ததால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தெருநாய்கள் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நலத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சி, தனியார் நிறுவனம் மற்றும் விலங்குகள் நலத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த மார்ச் 17 முதல் 23 வரை கணக்கெடுப்பு மேற்கொண்டது.
இந்த சர்வே முடிவின் அடிப்படையில், 100 வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் இருப்பதாக நகர்நலத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநகராட்சியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரியும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் நகர்நலத் துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும், மாநகராட்சியால் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையும் படிக்க: பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு.. காரணம் என்ன?
இந்த சூழ்நிலையில், கணக்கெடுப்பில் தெருநாய்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு சர்வேயில் 47,573 தெருநாய்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திராவிடம் கேட்டபோது, “முதன்முறையாக விஞ்ஞான முறையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 100-வது வார்டில் அதிகமாகவும், 49, 80 ஆகிய வார்டுகளில் குறைந்த எண்ணிக்கைலும் தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட நாய்களில் 65 சதவீதம் ஆண் நாய்களும், 35 சதவீதம் பெண் நாய்களும் உள்ளன. மொத்த நாய்களில் 83 சதவீதம் ஆரோக்கியமாகவும், 17 சதவீதம் நாய்கள் அடிபட்டு, காயம், தோல் நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளுடன் உள்ளன. இந்த கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, எதிர்காலத்தில் தெருநாய்கள் கருத்தடை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.
இதையும் படிக்க: “குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது..” பொள்ளாச்சி தீர்ப்பு குறித்து நயினார் நாகேந்திரன்!
மரிகுமார் பரமசிவம், சமூக நாய்கள் நல ஆர்வலர், “மக்களையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றுவதற்காகவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படியொரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதே விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவில்லை. அவர்களை தவிர்த்துவிட்டு எப்படி கணக்கெடுப்பு நடத்தினார்கள்? என்பது தெரியவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை சரியானதா? என்ற குழப்பமும், கேள்விகளும் எழுந்துள்ளன” என்றார்.