இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு முதுமை காரணமாக உயிர் இழந்ததை தொடர்ந்து தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்  பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நல்லகண்ணு உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

நல்லகண்ணு தனது உடலை ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உயிர் இழந்தவுடன் நேற்று உடனடியாக பதப்படுத்தப்பட்டது. இதன் பிறகே  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணி வரையில் நல்லகண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://x.com/mkstalin/status/2026965707850994016?

இதைத் தொடர்ந்து நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக, ‘வீர வணக்கம் வீர வணக்கம் ! வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்! தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட மற்றவர்கள் அதனை கூறினர்.

இதன் பிறகு நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை சென்றடைகிறது. பின்னர் முறைப்படி நல்லகண்ணுவின் உடல் ஆஸ்பத்திரி தலைமை நிர்வாகிகளிடம் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version