2026 டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு தற்போது சிக்கலாகியுள்ளது. இந்தியா நேரடியாக அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ:
தற்போது சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பெரும் சரிவைச் சந்தித்ததால் அதன் நெட் ரன் ரேட் -3.800 என்ற மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதிலிருந்து மீண்டு வர இந்தியா என்ன செய்ய வேண்டும்.
கட்டாய வெற்றி: இந்தியா தனது அடுத்த இரண்டு போட்டிகளில் அதாவது, இன்று நடைபெறும் ஜிம்பாப்வே மற்றும் மார்ச் 1ல் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் இந்தியா தொடரை விட்டு வெளியேற நேரிடும்.
பெரிய ரன் ரேட் வித்தியாசம்: வெறும் வெற்றிகள் மட்டுமே போதாது. தென் ஆப்பிரிக்காவிடம் இழந்த ரன் ரேட்டை ஈடுகட்ட, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராகப் பெரிய ரன் வித்தியாசத்தில் அல்லது மிகக் குறைந்த ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற வேண்டும். குறிப்பாக, ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா தனது ரன் ரேட்டை கணிசமாக உயர்த்த வேண்டியது அவசியம்.
இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் அரையிறுதிப் பயணம் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியையும் சார்ந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் மோதல்: இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்குச் சாதகமாக அமையும். அப்போது தென் ஆப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, இந்தியா 4 புள்ளிகளுடன் (அடுத்த 2 போட்டிகளில் வென்றால்) எளிதாக இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியும்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால்: ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தால், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே அரையிறுதிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்படும்.
