கோவையில் அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட ரகளையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்:
கோவை விளாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் 2225 எண் கொண்ட அரசு மதுபானக் கடையில், இன்று அதிகாலை முதல் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் மதுபான பாருக்கு மது அருந்த வந்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு:
இந்த மோதலில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலை, மதுபான கடைக்கு வெளியே கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர்.
காவல்துறை விசாரணை:
தற்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.