தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை உள்ள நிலையிலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8ம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இந்த முறை 16 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே பருவமழை தொடங்கியிருப்பதால், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும்(25.05.2025) நாளையும் (26.05.2025) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், உதகைக்கு கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இன்று உதகையில் உள்ள ஃபைன் பாரஸ்ட் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மரம் முறிந்து விழுந்ததில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆதிதேவ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.