மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கோவை மருதமலை வனப்பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலையை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதனால் யானை வழித்தடங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், மருதமலையில் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், அடிவாரத்தில் உள்ள 4.96 ஏக்கர் பரப்பளவில், 23 சென்ட் நிலத்தில் மட்டுமே 184 அடி உயர முருகன் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டு முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4.73 ஏக்கர் நிலம் அப்படியே விடப்படும் என்றும் அந்த இடத்தில் 15,000 பக்தர்கள் வரை தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலை அமையவுள்ள பகுதியில் இருந்து 600 மீட்டர் தொலைவில், 7 ஏக்கர் பரப்பில் பேருந்து முனையம், வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்த குத்தகைக்கு எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வார நாட்களில் 2,500 பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் 4 ஆயிரம் பக்தர்களும் வருகை தருவார்கள் என்றும் சிலை அமைக்கப்பட்ட பின், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமையவிருக்கும் முருகன் சிலை 7 கி.மீ., தொலைவில் உள்ள யானை வழித்தடத்தை, எந்த வகையிலும் பாதிக்காது என்றும் பக்தர்களால், வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, கண்காணிப்புக் கோபுரத்தை அமைத்து, வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்ய மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் எம்.சந்தான ராமன் மற்றும் அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்தக் குழு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
