தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஓபிஎஸ்-ன் மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் குமார், தனது தந்தைக்காகப் போடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். அத்துடன், ரவீந்திரநாத் தாமே போடி, கம்பம் அல்லது ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடவும் விருப்ப மனு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டத்தின் மற்ற 3 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற போதிலும், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபித்து வெற்றி பெற்றார். தற்போது அவர் திமுகவுடன் இணைந்துள்ள நிலையில், அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தனது சொந்த ஊர் மற்றும் சமூக மக்கள், உறவினர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால், அங்குப் போட்டியிடுவதே பாதுகாப்பானது என ஓபிஎஸ் தரப்பு கருதுகிறது.

எடப்பாடி பழனிசாமியுடனான அதிகாரப் போராட்டத்திற்குப் பிறகு, அண்மையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்-க்கு இம்முறை திமுக சார்பில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க ‘முக்குலத்தோர்’ சமூகத்தின் வாக்குகளை  பெறவும், தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலத்தைக் குறைக்கவும் திமுக இவரைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் இருவரும் ஒரே மாவட்டத்தில் களமிறக்கப்பட்டால், அது தேனி அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version