தீவிர ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மாநிலங்களவை எம்.பி.., தர்மர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்ததன் பின்னணியில் கூறப்படும் காரணங்கள் பற்றி பார்க்கலாம்.
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முயற்சியால் ஒன்றிய செயலாளரில் இருந்து மாநிலங்களை உறுப்பினர் ஆனவர் தர்மர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பிரிவினையிலிருந்தே ஓ.பி.எஸ் தரப்பில் அவரது தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இதையடுத்து சமீப நாட்களாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுகவில், தவெகவில் என இனைந்து வந்த நிலையில் எம்.பி., தர்மரோ எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இதன் பின்னணியில் இருப்பது ஓ.பன்னீர்செல்வத்தின் சமீபத்திய செயல்பாடுகள் தான் என்கிறது தகவல்கள்.
அதாவது, அதிமுகவை ஒன்றிணைத்து விடலாம் எனும் நம்பிக்கைகொண்டு அதே நம்பிக்கையை தன்னை சுற்றியிருப்பவர்களுக்கும் கொடுத்து வந்த ஓ.பி.எஸ், அந்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்காத நிலையில் தற்போது என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப்போயுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சரியாக கூற வேண்டுமென்றால், தன்னை பாஜக ஏமாற்றிவிட்டதாக நினைத்த ஓ.பி.எஸ் அதன் வெளிப்பாடாகவே என்.டி.ஏவிலிருந்து வெளியேறினார். பாஜகவுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார். இன்னும் கூடுதலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கே சென்று சந்தித்து வந்தார். திமுக ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுத்தார். அப்படி செய்தவர், திடீரென தனது மகன் மூலம் பியூஸ் கோயலிடம் பெக்ஹ்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் தங்களுக்கு 3 தொகுதிகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இவ்வாறு குழப்பத்தின் உருவமாக மாறி நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுகவில் இணைந்து விடலாம் என அதிமுக விசுவாசிகளாக இருந்த தற்போதைய முன்னாள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இவற்றிற்கெல்லாம் பின்பே முழுமையாக நம்பிக்கையிழந்து ஓ.பி.எஸ்ஸின் செயல்பாட்டோடு முரண்பட்டு எல்லோரும் அவரவர் தனிப்பட்ட எதிர்காலத்திற்காக எதுவும் செய்யலாம் என அதிமுகவின் எதிரியான திமுகவிலேயே ஐக்கியமாயினர். அதன் வெளிப்பாடுகள் தான், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் என அவரவர் வசதிக்கு ஏற்றவாறு கட்சி மாறினர். அந்த வரிசையில் தற்போது எம்.பி.தர்மர் அதிமுகவிலேயே தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவரது எம்.பி.பதவியும் தக்கவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு நமது ஆதரவு எம்.பி., தேவை என்ற முக்கியமான அந்த கணக்கின் அடிப்படையில் தான் எடப்பாடியும் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பார் என்றும் நினைக்க தோன்றுகிறது. தர்மர் அவர் மட்டுமின்றி அவரோடு இன்னும் சில ஓ.பி.எஸ் ஆதரவாளர்களோடு அதிமுகவில் இணைந்துள்ளார். இந்த இணைப்பின் மூலம், தான் எம்.பி.யாக காரணமாக இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு தர்மர் ஆப்பு வைத்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் பதவியில் இருப்பவர்களை பொறுத்தவரை எம்.எல்.ஏ., ஐயப்பன் மட்டுமே தற்போது அவரோடு இருக்கிறார். அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது இனி தெரியும். பொதுவாக அரசியலில் முடிவெடுக்கும் திறனின்றி குழப்பவாதியாக, நம்பக்கூடாதவர்களை நம்பினால் என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
