பிளாஸ்டிக் பால் பாக்கெட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், சோதனை அடிப்படையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு மாற்றாக பால் விநியோகிக்கும் நடைமுறையை கண்டறிய ஆவினுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஆவின் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சோதனை முயற்சியாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. இதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து தலா ரூ.3.60 லட்சம் மதிப்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாகவும், அவற்றை நிறுவ தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அவற்றைச் சுற்றியுள்ள வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகிக்க வேண்டாம் என மொத்த விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. அதன்பின் அந்தப் பகுதிகளில் பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இரு நகரங்களிலும் தானியங்கி இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் பொதுமக்களின் வரவேற்பு ஆகியவை ஆய்வு செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஆவின் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version