ரூ.50 லட்சம் ஏமாற்றியதால் கடந்த ஒரு வருடமாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் தான் பேசுவதை தவிர்த்ததாக போலீசாரிடம் நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்படம் தயாரிப்பதால் அவர்தான் தன்னை பிரசாத்திடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும், மற்றப்படி நேரடி பழக்கமில்லை எனவும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25 ஆம் தேதி சம்மன் அனுப்பியது.
கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். தற்போது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிலையில் நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என காவல்துறை விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அவரது உடல்நல கோளாறுகளுக்காக நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தி வரும் மருந்துகளை வாங்கி பரிசோதனை செய்துள்ளனர். மேலும்,சென்னை பெசன்ட் நகர் அமைந்துள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் இன்று காலை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டர். பெசன்ட் நகரில் கலாக்ஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா சாலையில் நடிகர் கிருஷ்ணா குடியிருப்பில் சோதனை நடத்தியுள்ளனர். அவரது வீடு கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை கணக்குகளையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களையும் கிருஷ்ணா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
திரைப்பட பணிகளுக்காக கிருஷ்ணாவின் நண்பரிடம் பிரசாத் 50 லட்சம் பெற்றதாகவும், மோசடி பேர்வழி தெரிந்ததும் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்படம் தயாரிப்பதால் அவர் தான் தன்னை பிரசாத்திடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும், மற்றப்படி நேரடி பழக்கமில்லை எனவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
