அதிமுகவினரிடையே  நடைபெறும் அணி மோதல்கள் விழுப்புரம் அதிமுகவுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமிக்கும், மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ  சி.வி.சண்முகத்துக்கும் இடையே நடைபெற்றுவரும் உட்கட்சிபூசல் முற்றிக் கொண்டே வருகிறது.

விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்த சி.வி.சண்முகத்தின் பதவி பறிக்கப்பட்டு பசுபதி என்பவரை, எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இதற்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டங்களையும், நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்திவரும் பசுபதி, சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை வேண்டுமென்றே நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனால் அழைப்பில்லாமலேயே அதிமுக நிகழ்வுக்கு செல்லும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை, உள்ளே அனுமதிக்காததால் இருதரப்பினரும் ஆவேசம் காட்டும் சூழலும் நிலவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் நாட்டார் மங்கலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு வந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கு அழைப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஆயினும், அங்கு வந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சி.வி.சண்முகத்தை வாழ்த்தி கோஷமிட்டதோடு, கூட்டம் நடந்த அரங்கிற்குள்ளும் நுழைய முயன்றனர். அவர்களை அதிமுகவினர் தடுத்ததால் இருதரப்பினரிடையேயும் கைகலப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version