அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு பிறகு சற்றே தணிந்திருந்த உட்கட்சிப் பூசல், தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே புதிய அதிகார மோதலாக வெடித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனராக இதுவரை எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், இன்று வெளியான நாளிதழில் இபிஎஸ்-ன் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே கட்சி நிர்வாகத்தில் அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு ஏற்க மறுத்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கட்சியின் மூத்த தலைவர்கள் இடையேயான இந்த மோதல் தற்போது மாவட்ட அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக மீண்டும் ஒரு உட்கட்சிப் பூசலை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி , நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆர்.பி.உதயகுமார், குமரகுரு உள்ளிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். அதாவது, தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தவெகவிற்கு ஆதரவு அளிக்க குதிரை பேரம் நடந்துள்ளதாக ஆளுநரிடம் இபிஎஸ் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
