கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்ற மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பார்த்திபன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. நாள்தோறும் மது அருந்திவிட்டு வரும் பார்த்திபன் மனைவி பிரேமகுமாரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த பார்த்திபன், போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன வேதனையடைந்த பிரேமகுமாரி, வீட்டை விட்டு வெளியேறி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன், மனைவியைக் காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளார். எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பாறையில் மோதி மயங்கிய பார்த்திபன் தன்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.
இதனால் பிரேமகுமாரி கூச்சலிடவே, சத்தம் கேட்டு அங்கு வந்த இளைஞர்கள் கிணற்றில் குதித்து பிரேமகுமாரியை காப்பாற்றியுள்ளனர். பார்த்திபனை தேடிப்பார்த்தும் மீட்கமுடியாததால், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கிணற்றில் இறங்கி 1மணி நேரத்துக்கும் மேலாகத் தேடி பார்த்திபனின் சடலத்தை மீட்டனர்.
வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
