தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்த பாஜகவின் அதிரடி நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசியல் களத்திற்குப் புதியவரான விஜய்யால் இந்தத் தேர்தலில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையோ அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்த முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பாஜக தனது தனிப்பட்ட பலத்தை நிரூபிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், தங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்றும் நிதின் நபின் குறிப்பிட்டுள்ளார். தவெக மற்றும் பாஜக இடையே சில கொள்கை ரீதியான ஒற்றுமைகள் இருப்பதாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விஜய்யுடன் ‘எப்போதும்’ கூட்டணி கிடையாது என்கிற கருத்தை அவர் முன்வைத்துள்ளார். தவெக ஒரு தனிச்சக்தியாக உருவெடுப்பதைக் காட்டிலும், அது மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான மாற்றத்தைச் செய்யும் என்பதே தற்போதைய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version