கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜன.12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபி.க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஸ் தங்கையா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் டிச.29-ம் தேதி ஆஜராகினர். அவர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஜன.12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அடுத்த அதிரயாக, விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாகனத்தை கரூரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதிரடி சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ள விஜய்க்கு ஜனநாயகன் திரப்படம் முதல் அரசியல் பிரச்சனைகள் வரை அடுத்தடுத்து அடிமேல் அடியாக விழுவதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
