தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது நிர்வாகக் குழுவை வலுப்படுத்தும் வகையில் முக்கிய அதிகாரிகளை நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் பணிகளை ஒருங்கிணைக்கவும், நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளை வழங்கவும் தனிச் செயலாளர்கள் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதய் சந்திரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முதலமைச்சரின் தனி செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் நிலை தனிச்செயலாளராக செந்தில் குமாரும், 2ம் நிலை தனிச்செயலாளராக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
லட்சும் பிரியாவும் ஆதி திராவிட நலத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஆவார். முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில் தனிச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்காலிக சபாநாயகர் நியமனம் மற்றும் தனிச் செயலாளர்கள் நியமனம் எனத் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் மூலம் முதலமைச்சர் விஜய் தனது நிர்வாகப் பயணத்தைத் துடிப்புடன் தொடங்கியுள்ளார்.
