தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் வழக்கமான ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக, மே மாதத்திற்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த கள நிலவரத்தை ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு இன்று சென்னை வந்துள்ளது.

பொதுவாக, ஒரு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ (One Nation One Election) கொள்கை அமல்படுத்தப்பட்டால் தேர்தல் தள்ளிப்போகலாம் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர். ஆனால், தற்போதைய நிலவரப்படி, தேர்தல் ஆணையம் வழக்கமான மே மாதக் காலக்கெடுவை முன்னிறுத்தியே தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, கொரோனா பேரிடர் காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 6-ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது இயல்பு நிலை நீடிப்பதாலும், சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 10-ஆம் தேதி வரை இருப்பதாலும், இம்முறை மே மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நிர்வாக ரீதியான பணிகளை முழுமையாக முடிக்க அவகாசம் கிடைக்கும் என ஆணையம் கருதுகிறது.

தேர்தல் தேதியை இறுதி செய்வது மற்றும் முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவது தொடர்பாக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உள்ளிட்ட 15 அதிகாரிகள் அடங்கிய குழு இன்று (பிப்ரவரி 25) சென்னை வந்துள்ளது. இக்குழுவினர் இன்றும் நாளையும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர். இதில் தேர்தல் தேதி குறித்த கட்சிகளின் விருப்பங்களும் கேட்டறியப்படும்.

சென்னையில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர், தமிழகத்தின் 38 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுடன்  விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றனர். கோடை கால வெப்பத்தைக் கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், தேர்தல் பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை; திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் 100% முடிவடைந்துவிட்டன” என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக,  மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோல்,  புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற எதிர்க்கட்சிகள் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளன. அதே சமயம், திமுக அரசு தனது நலத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாகத் தேர்தலைத் திட்டமிட்ட தேதியில் நடத்தவே விரும்புகிறது. இதற்கிடையில், கோடை கால வெப்பத்தைத் தவிர்க்கும் வகையில் மார்ச் இறுதியிலேயே தேர்தலை நடத்தலாமா என்ற ஆலோசனையும் தேர்தல் ஆணையத்திடம் ஒரு சில கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version