தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) காலை முதல் தொடங்குகிறது. இந்தத் தேர்தல் திருவிழாவின் முதல் நாளிலேயே, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அவர் மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுவதற்கான மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் சமர்ப்பிக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவர், தற்போது நான்காவது முறையாக அதே தொகுதியில் களம் காண்கிறார். தமிழகத்தில் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் அவர் இன்று தேர்தல் களத்தில் முறைப்படி தனது பயணத்தைத் தொடங்குகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி கொளத்தூர் தொகுதி முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டுள்ளனர்.
இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் முக்கியக் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்ய உள்ளதால், தமிழக அரசியல் களம் இன்று முதல் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படும்.
கட்டுப்பாடுகள்: தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மூன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வேட்பாளர்கள் வேட்பு மனுவை இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் சமர்ப்பிக்கலாம். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்க லின் போது நேரில் ஒப்படைக்க வேண்டும்.
வேட்பாளர்கள், வேட்பு மனுவில் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். இந்த தேர்தலில், மின்னணு ஓட் டுப்பதிவு எந்திரங்களில் வைக்கப்படும் ‘பேலட் ஷீட்டில், வேட்பாளரின் கலர் போட்டோ சேர்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தேதியிலிருந்து 3 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட வேட்பாளரின் போட்டோவையே, வேட்பு மனுவில் இணைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான வருகிற 6-ந்தேதி மாலை 3 மணிக்குள் உறுதிமொழிபத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனுவுக்கான வைப்புத் தொகையாக பொதுப் பிரிவினர் ரூ.10,000 மற்றும் ஆதிதிராவிடர்/பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5,000 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் வைப்புத் தொகையைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும், ஏப்ரல் 9-ம் தேதி மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
