தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்  என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விஜய் களம் கண்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் அவரது பாடல்கள் மற்றும் கட்சியின் சின்னங்கள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, மாணவர்கள் தவெக கொடி மற்றும் கட்சியின் பெயரைக் குறிப்பிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதே இந்த வாய்மொழி கட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில், கல்வி நிலையங்கள் அரசியல் களமாக மாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் மாணவர்கள் நடனமாடப் பாடல்களைத் தேர்வு செய்யும் போது, அரசியல் ரீதியான பிம்பத்தைக் கொண்ட பாடல்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக முறையான அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை என்பதும், இது ஒரு தற்காலிகமான வாய்மொழித் தகவல் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version