தமிழகத்தின் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்து, உயர்த்தப்பட்ட தொகையை வழங்குவதற்கு அரசுக்குச் சில கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அதுவரை தற்போதைய நடைமுறைப்படி மே மாதத்திற்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ரூ.1,000 விரைவில் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது, “தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் சித்திக், முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசின் நிதி இருப்பு குறித்து முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version