உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் சார்பில் 1.20 கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை சென்னையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார்.

சத்குருவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27)  1கோடியே 20 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா, தமிழ்நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இதுவரை 13கோடியே 40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், முதலமைச்சரின் தாயாரும் இசைக்கலைஞருமான ஷோபா சந்திரசேகர், நடிகை சுஹாசினி மணிரத்னம் மற்றும் லேன்ஷன் குழும தலைவர் லங்கா லிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளைத் துவக்கி வைத்தனர்.

பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்’என்ற ஐநா-வின் இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த மாபெரும் மரம் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற துவக்க விழாவில், 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு, மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன.

மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும். இதனை ஊக்குவிக்கும் வகையில், தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் உள்ளிட்ட மதிப்புமிக்க டிம்பர் மரங்களின் கன்றுகளும், தொடர்ச்சியான வருமானத்தைப் பெறுவதற்காக சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடிய மிளகு, அவகாடோ, ஜாதிக்காய் போன்ற பயிர்களின் கன்றுகளும் விவசாயிகளுக்கு, ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

ஆசியாவிலேயே மிகப்பெரியதும், முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படுவதுமான கடலூர் நர்சரியில் ஆண்டுதோறும் 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நர்சரியில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரு நர்சரிகளும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள 45 விநியோக மையங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள 8 விநியோக மையங்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

இதனுடன் மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கு ஏற்ற மரவகைகள் தேர்வு, நீர் மற்றும் களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி உள்ளிட்ட ஆலோசனைகளை, காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version