அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளையை பணியிட மாற்றம் செய்த அரசின் உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தன்னை பணியிடம் மாற்றம் செய்தது பழிவாக்கும் நடவடிக்கை எனக் கூறி அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தனது பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பேரணி செல்லும் முன் முறையான அனுமதி கடிதம் உயர் அதிகாரிகளுடம் வழங்கி இருப்பதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தன்னை பணியிட மாற்றம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என வாதம் வைக்கப்பட்டது.
அரசு தரப்பில், மனுதாரரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவத் துறை இணைப் பேராசிரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, அரசின் பணியிட மாற்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2 வாரங்களில் அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.