முதலமைச்சரின் அலுவலகம் இடமாற்றத்தால் பட்ஜெட் தயாரிப்பு பணி பாதிக்கப்படுவதாக தலைமைச் செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இட நெருக்கடி காரணமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள முதலமைச்சரின் அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் தற்போது இயங்கி வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலகப் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவை கலைவானர் அரங்கிற்கு மாற்றப்படுகின்றன.

அதோடு 10வது தளத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலாத் துறையின் எழுதுபொருட்கள் அறையை, அதே துறையின் பிற பிரிவுகள் அமைந்துள்ள 9வது தளத்திற்கு மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் அலுவலக இடமாற்றத்தால் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் முதல்வர் அலுவலக இடமாற்றத்துக்காக பிற துறை அலுவலகங்களை மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடநெருக்கடி குறித்து தலைமைச் செயலக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். தற்போதைய சூழலில் பல துறை அலுவலகங்களை இடமாற்றம் செய்வது பட்ஜெட் பணிகளை பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் 9ம் தளத்திலும் 3ல் ஒரு பங்கு இடம் எடுக்கப்படுவதால் ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்படும் எனவும்

வணிகவரி, பதிவு, அறநிலையத்துறை அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு துறை அலுவலகங்களை மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தலைமைச் செயலக சங்க ஊழியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version