தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது ஆட்சியின் தொடக்கத்தில் கவலையில் இருந்ததாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. இன்னொரு பக்கம் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்ததாக கூறிய முதலமைச்சர், இந்த 2 நெருக்கடிகளையும் எதிர்கொள்வது தான் கவலைக்கு காரணம் என்றார். ஆனால் 5 ஆண்டுகள் கழித்து தற்போது மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இந்த ஆட்சியில் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். மக்களுக்காக வாழ்ந்தேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தேன் என்பது புகழ்ச்சி அல்ல, உண்மை. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து ரூ.3,400ஆக உயர்ந்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இருப்பினும், முதலமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்தது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் யாரும் இன்று அவைக்கு வரவில்லை.
தொடர்ந்து பேசிய முதல்வர், ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்க வேண்டிய நான் இன்று ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சோதனைகள் எனக்கு புதிதல்ல, சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். அவர்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடையலாம், ஆனால் சோதனைகள் என்னை எதுவும் செய்யாது. தேசபக்தி குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு அவர்கள் இந்த தேசத்திற்கு எதுவும் செய்யவில்லை.
ஆளுநர் கேள்வி கேட்க வேண்டும் என்றால் மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும். ஒரே காரணத்தைத் திரும்ப திரும்பச் சொல்லி உரையை வாசிக்காமல் தவிர்த்து வருகிறார் ஆளுநர். ஆளுநர் தனது உரையை படிக்காமல் உள்ளது வேடிக்கையாக உள்ளது. இது மக்களாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால்.
தமிழ்நாடு அனைத்து வகையில் முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிறது” என்று கூறி திமுக அரசில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.
முதியோர், கைம்பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள முதல்வர், இத்திட்டத்தின்கீழ் தற்போது 33 லட்சன் பேர் பயன்பெற்றுவரும் நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணபித்த மேலும் 1.8 லட்சம் பேருக்கு வரும் 4ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் இதில் மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ2,000 வரை உதவித்தொகை பெறுகின்றனர் என்றும் கூறினார்.
மேலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதி நேர ஆசிரியர்களின் பணி காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். ஆனாலும் பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்துணவு அமைப்பாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர பென்ஷன் ரூ.2,400 லிருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் பணி நிறைவு தொகையானது ரூ.1 லட்சத்துலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வனக் களப்பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.
