தமிழகத்தின் நிதி நிலைமை மற்றும் துறைவாரியான திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சித்திக் உள்ளிட்ட அரசின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து வெளிப்படையான “வெள்ளை அறிக்கை” வெளியிடப்படும் என்று முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தச் சூழலில், இன்றைய கூட்டத்தில் அந்த அறிக்கை தயாரிப்புப் பணிகள் மற்றும் அதில் இடம்பெற வேண்டிய முக்கியத் தரவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பெரும்பாலும் இந்த வார இறுதிக்குள் தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, துறைவாரியாகத் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, நிலுவையில் உள்ள திட்டங்களுக்குத் தேவையான கூடுதல் நிதி ஆதாரங்கள் யாவை என்பது குறித்து நிதித்துறைச் செயலாளருடன் முதலமைச்சர் தீவிரமாக ஆலோசிக்க உள்ளார். அரசின் நிதிச் சுமையைக் குறைத்து, புதிய திட்டங்களுக்கான பாதையை வகுக்க முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
