உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 06-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் காலை, மாலை என இருவேளைகளிலும் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார். தொடந்து ஏழாம் திருநாளான இம்மாதம் 24.04.2025ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார்.
அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் திருநாளான நேற்று(13 05 2826)அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்;பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 4.00மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். காலை 6.00.மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருதேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் அருள்பாலித்தார். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
