முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், வாடிக்கையாளர் வருகை குறைவாக இருப்பதாகவும், அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை என்றும் ஒரு நாளிதழில் வெளியான செய்திக்கு, கூட்டுறவுத் துறை கடும் மறுப்பு தெரிவித்துள்ளது. இக்கூற்றுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உண்மை நிலவரம் என்ன?

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள், ஜெனரிக், நியூட்ராசூட்டிக்கல்ஸ், இந்திய மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் பிராண்டட் மருந்துகளை சந்தை விலையை விட 70% முதல் 90% வரை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றன.

கூட்டுறவுத் துறையின் விளக்கப்படி, முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது:

அதிகரிக்கும் விற்பனை: பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ₹300 ஆக இருந்த மருந்து விற்பனை, தற்போது ஒரு நாளைக்கு ₹800-ஐ தாண்டியுள்ளது.

வாடிக்கையாளர் வருகை உயர்வு: ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 5 நபர்கள் மட்டுமே வந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 20 நபர்கள் மருந்துகளைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

மிகக் குறைந்த விலையில் மருந்துகள்: இதுவரை சுமார் ₹6 கோடி மதிப்பிலான ஜெனரிக் மருந்துகளும், ₹2 கோடி மதிப்பிலான பிராண்டட் மருந்துகளும் முதல்வர் மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளன.

போதுமான மருந்து இருப்பு மற்றும் விரைவான விநியோகம்

ஒவ்வொரு முதல்வர் மருந்தகத்திலும் 219 ஜெனரிக் மருந்துகளும், 170 பிராண்டட் மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, தேவைக்கேற்ப பிற மருந்துகளையும் அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்து, 24 மணி நேரத்திற்குள் பொதுமக்களுக்குக் கிடைக்கும்படி செய்யும் புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

முதல்வர் மருந்தகங்களை நடத்தும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்க மருந்தாளுனர்களுக்கு லாபத்தில் வழங்கப்படும் பங்குத்தொகை 75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு ₹1,000 வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட கூட்டுறவுத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

பாக்கெட் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு மறுப்பு

மருந்து கட்டுப்பாட்டு விதிகளின்படி, சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாமல் எந்தவித உணவுப் பொருட்களையும் மருந்தகங்களில் விற்பனை செய்ய இயலாது. எனவே, நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவு வகைகள் விற்கப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மை இல்லை என கூட்டுறவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், முதல்வர் மருந்தகங்கள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version