2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகியவற்றுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் மோதல் போக்கு நிலவுகிறது. கடந்த 2021 தேர்தலில் வழங்கப்பட்ட 6 இடங்களை விடக் குறைவாகவே இந்த முறை ஒதுக்க முடியும் என திமுக தரப்பு கூறியதாகத் தெரிகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள CPM மாநிலச் செயலாளர் பி. சண்முகம், “கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்தோம். அனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுவதில் சிரமம் இருந்து வருகிறது. எங்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி கூட்டணியில் உடன்பாடு எட்டப்படும் என்று கூறியிருந்தார்.
இதேபோன்ற ஒரு நெருக்கடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தையிலும் நிலவுகிறது. கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த காலத்தை விட தற்போது தங்கள் கட்சியின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், புதிய கூட்டணிக் கட்சிகள் மற்றும் திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்பும் சூழல் காரணமாக, 8 இடங்களுக்கு மேல் வழங்க திமுக தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. தொகுதிகளைக் குறைக்க முடியாது என திருமாவளவன் தரப்பு பிடிவாதமாக இருப்பதால், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் (28 இடங்கள்), மதிமுக (4 இடங்கள்), ஐயுஎம்எல் மற்றும் கொமதேக (தலா 2 இடங்கள்) என சில கட்சிகளுடன் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. புதிய வரவான தேமுதிக மற்றும் இடதுசாரிகளுடனான இழுபறி நீடிப்பதால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, “பாஜகவை வீழ்த்துவதே இலக்கு என்றாலும், கட்சியின் சுயமரியாதை முக்கியம்” என இடதுசாரிகள் குரல் எழுப்புவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையிலேயே இந்த மோதலுக்குத் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவரும்.
