தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை மிக விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாற்றத்தின் போது, ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் (234 இடங்கள்), முதலமைச்சரையும் சேர்த்து அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியில் இருக்க முடியும். தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகின்றனர்.
விதிகளின்படி இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளதால், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது வனம், வேளாண்மை, வருவாய்த்துறை, கூட்டுறவு மற்றும் வீட்டுவசதி வாரியம் போன்ற மிக முக்கியத் துறைகள் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாமல், முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ளன. நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும், மக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கவும் இந்தத் துறைகள் அனைத்தும் புதிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
தவெக அரசுக்குச் சட்டமன்றத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தோழமைக் கட்சியான காங்கிரஸை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு 2 முக்கிய அமைச்சர் பதவிகளை ஒதுக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இரு கட்சிகளின் மூத்த தலைவர்களுக்கிடையே பலகட்ட ரகசிய ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

