சென்னை அண்ணாசாலை காங்கிரஸ் மைதான நிலம் தொடர்பாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் அறக்கட்டளை நிலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், நிலத்தை எடுத்து கொண்டதாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் அறக்கட்டளை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமாக 180 கிரவுண்ட் நிலம் உள்ளது.
காமராஜர் அரங்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை 1996 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த நிலத்தில், திறந்தவெளி நிலத்தை பராமரிப்பது தொடர்பாக காங்கிரஸ் அறக்கட்டளை ஆட்சேபமில்லா சான்று வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.
இந்நிலையில் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என கூறி தனியார் நிறுவனத்திடமிருந்து நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை கையகப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்தியஸ்தர் முன் தனியார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை நிலத்தில் தங்களது உரிமையில் தலையிட காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி ப்ளூ பேர்ல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஒப்பந்தம் இன்னும் காலாவதி ஆகவில்லை என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் நிலத்தை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் அறக்கட்டளை சுவாதீனம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா, நிலத்தில் தனியார் நிறுவனத்தின் உரிமையில் தலையிட காங்கிரஸ் அறக்கட்டளைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். அதேசமயம் மனுவுக்கு பதில் அளிக்கும்படி காங்கிரஸ் அறக்கட்டளை மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.