மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வங்கக்கடலில் உருவான தாழ்வுநிலை காரணமாகவும் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வருகிறது. வழக்கத்தை விட சுமார் 10 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிய நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் நல்ல மழையைப் பெற்றுள்ளன.
விவசாய நிலங்களில் பாதிப்பு:
குறிப்பாக கோவை மாவட்டத்தில், வேளாண் நிலங்கள் அதிகம் உள்ள புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாத கனமழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சந்தையில் என்ன நடக்கிறது?
இந்த ஆண்டு கோடைக்காலத்திலும் தக்காளி, வெங்காயம் போன்ற முக்கிய காய்கறிகளின் விலை கடுமையாகக் குறைந்திருந்தது. வரத்து அதிகரிப்பால், தக்காளி கிலோ ₹10 முதல் ₹15 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ₹20 முதல் ₹25 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ₹40 முதல் ₹45 வரையிலும் விற்றது. சந்தைகள் மட்டுமின்றி, வாகனங்களிலும் 6-7 கிலோ தக்காளி ₹100-க்கும், 4-5 கிலோ வெங்காயம் ₹100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர் மழையால் வரத்து குறைவு:
இருப்பினும், கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் மற்றும் சுரைக்காய், பூசணிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், அரசாணிக்காய், பச்சை மிளகாய் போன்ற சமவெளி காய்கறிகள் நிலையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது தொடர் மழை காரணமாக பல இடங்களில் காய்கறிகளின் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் என்பதால், விளைநிலங்களில் இருந்து உழவர் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் கருதுகின்றனர்.