திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும்,
எம்எல்ஏ.மகாராஜனும் அரசு பொது நிகழ்ச்சி மேடையில் ஆட்சியர் முன்னிலையில் “போடா வாடா” என்று பேசி குழாயடி சண்டையிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் , திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் பெயரிலேயே இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தில் சார்பில் விபத்து நிவாரண தொகைக் கான ஆணையை தேனி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டபோது, அந்த ஆணையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்.பி.கையில் இருந்து பறித்து ”இது நான் வாங்கி கொடுத்தது, நான் தான் கொடுப்பேன்” என பொதுமக்கள் முன்னிலையில் பறித்து பயனாளிக்கு கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து “போடா முட்டா பயலே”என்று கலெக்டர் முன்னிலையிலேயே பகிரங்கமாக கூறினார். தனது தொகுதியில், தொகுதி மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மேடையிலேயே கூறியதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ மகாராஜன் “யாரைப் பார்த்து டா முட்டாப் பயலே சொல்ற” ராஸ்கல் தொலைச்சிருவேண்டா”என்று தங்கதமிழ்செல்வனை பார்த்து சீறினார்.பெண்கள் குழாயடி சண்டை போடுவதைப் போல திமுக எம்.பி.யும், திமுக எம்எல்ஏவும் சண்டையிடுவதை பார்த்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பதறிப்போனார்.உடனடியாக சுதாரித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி நன்றி உரை கூறி வேகமாக நிகழ்ச்சியை முடித்து வையுங்கள் என்று தெரிவித்து அவசர அவசரமாக முடித்து வைத்தனர்.
ஏற்கனவே நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் என யாரும் கலந்து கொள்ளாமல் காலி சேர்களுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏ யும் பொதுமக்கள் முன்னிலையில் “போடா வாடா” சண்டையில் ஈடுபட்டதால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று கவலைப்படும் விதத்தில் அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் என்பதையும் மறந்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.