: தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், அதிமுக-வின் முக்கியத் தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி மீதும் திமுகவின் ரகசியத் திட்டங்கள் குறித்தும் பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. மற்ற அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் அதிமுக எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமாவளவனை முதலமைச்சராக ஏற்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. “நான்தான் முதலமைச்சராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருப்பேன்” என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார்.
ஒருகட்டத்தில் திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க இபிஎஸ் முயன்றார். இதற்கு கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் பச்சைக்கொடி காட்டினர். “திமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் எங்களை அழைத்து, நல்ல பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆசை காட்டினர். ஆனால், திமுகவுடன் இணைவதை எனது குடும்பத்தினரே ஏற்க மாட்டார்கள்” என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே சசிகலா தான். ஆனால், இன்று கட்சியில் தனக்குக் கருத்து வேறுபாடு உடைய அனைவரையும் இபிஎஸ் வெளியேற்றிவிட்டார். அதிமுகவை உடைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை; ஆனால் இனியாவது இபிஎஸ் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் எனப் பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் இணைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.”
தவெக-விற்குத் தாங்கள் ஆதரவு அளித்ததற்கான காரணத்தைத் தெளிவுபடுத்திய அவர்கள், “தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதிமுகவிற்கும் ஒரே நோக்கம் தான். ஆனால் தவெக-வை ஆதரிப்பதில் தான் எங்களுக்கும் இபிஎஸ்ஸிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல், தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இன்றி இபிஎஸ் செயல்படுகிறார்” எனச் சாடினர்.
இருப்பினும், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியை இன்னும் மதிக்கிறோம் என்றும், ஆனால் அவர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு கட்சியை ஒன்றுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
