திமுகவின் இளைஞர் அணியினர் கட்டுப்பாடு உள்ளவர்கள் என்றும் கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தால் எதுவும் செய்யமுடியாது என்று விஜய்யை தாக்கி உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவை தோற்கடித்துவிடலாம் என்று பலர் போடும் கணக்கை இளைஞர் அணி சுக்குநூறாக உடைக்கும் என்று தெரிவித்துள்ளார். “இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சாட்சி. கட்டுப்பாடு இல்லாமல் 1 லட்சம் இல்லை, 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது என்று கரூர் சம்பவத்தை குறிப்பிடும் நோக்கில், விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
