இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு வரும் குடியரசு தலைவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் 12.10 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
பின்னர் மதியம் 1.35 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கும் குடியரசு தலைவரை ஆளுநர் ஆர்.என். ரவி உபசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை திருச்சி மார்க்கமாக திருவாரூர் செல்லும் குடியரசு தலைவர், நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
குடியரசு திரவுபதி முர்முவின் இந்த பயணத்தால் சென்னை, திருச்சி விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை, வர்த்தக மையம், திருவாரூர் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.