சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பான அரசு பங்களாவில், எடப்பாடி பழனிசாமி கடந்த 2011 முதல் ‘செவ்வந்தி’ என்ற அரசு பங்களாவில் தான் வசித்து வந்தார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, அமைச்சராக, முதல்வராக, எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் சுமார் 15 ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்து வந்தார்.
தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக அந்த வீட்டில் வசிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வீட்டை காலி செய்து ராயப்பேட்டை பகுதியில் குடியேறியுள்ளார்,
சென்னை இராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் உள்ள புதிய பங்களா வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடியேறுகிறார். இந்நிலையில் இன்று முகூர்த்த்நாள் என்பதால், குடும்பத்தினருடன் பால்காய்ச்சி புதிய வீட்டில் குடியேறினார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி காலை 6.28 மணிக்கு புதிய வீட்டிற்கு வந்தார். முன்னதாக 6 மணிக்கே அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர். அதன் பின் பால் காய்ச்சும் நிகழ்வை முடித்து கொண்டு காலை 7.13 மணிக்கு புதிய வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது மனைவியும் காரில் புறப்பட்டு சென்றார்.
கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அரசு வீடுகளைக் காலி செய்தனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் அந்தஸ்து காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அதே பங்களாவில் தொடர்ந்து தங்க அப்போதைய திமுக அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
