ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தின் குடிநீர் தேவைக்காகக் கிருஷ்ணா நதி நீர் நேற்று (மே 28) மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தது.

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் பூண்டி நீர்த்தேக்கத்திற்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் தற்போது தமிழக எல்லைப் பகுதியை வெற்றிகரமாக வந்தடைந்துள்ளது.

எல்லையை வந்தடைந்த இந்தத் தண்ணீர், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதற்காகக் கண்டலேறு – பூண்டி கால்வாயில் தூர்வாரும் பணிகள் மற்றும் கரை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. கால்வாயின் கரைகள் பலவீனமாக இருக்கும் பகுதிகளில் தண்ணீர் சீராகச் செல்வதையும், கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணா நதி நீர் வருகையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வருகையைக் கண்காணித்து வருவதால், பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வரும் நாட்களில் படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version