சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூட்டணி அரசியல், ஸ்டெர்லைட் விவகாரம், தனது புதிய நூல் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணி அளவில் முதலமைச்சர் விஜயை சந்தித்தார் வைகோ. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தவெக உடன் கூட்டணிக்கு வருமாறு வைகோவுக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விஜய்யுடன் பேசியது என்ன என்பது குறித்து விளக்கினார்.
தூத்துக்குடியில் “கிரீன் காப்பர்” என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல்கள் வருவதாகக் கூறிய அவர், எந்த சூழலிலும் அந்த ஆலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரைகளை ஆறு தொகுதிகளாக நூலாக்கியிருப்பதாகவும், அந்த நூல் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார். நூலின் முதல் பிரதியை முதலமைச்சர் விஜய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் தன்னுடன் சுமார் 45 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி பேசியதற்கு நன்றி தெரிவித்த வைகோ, இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்ததாக கூறினார். அரசியல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பான முடிவு, வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசித்த பின்னரே எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார்.
அதேபோல், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தான் எனக் குற்றம்சாட்டிய அவர், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில்தான் அதனை அதிமுக அரசு மூடியதாகவும், ஆனால் இறுதி வரை அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.

