தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில்தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.

ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை. ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துளியும் இல்லை. பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version