அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தினால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேசிய புற்றுநோய் பாதித்து உயிர்வாழ்வோருக்கான தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் கேன் கிட்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் புற்றுநோய் பாதித்து கல்வியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 10 மற்றும் 12 வகுப்புத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்று புற்றுநோயுடன் போராடிய குழந்தைகளுக்கு, அமைச்சர் பாராட்டு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கினார்….

மேலும் புற்றுநோய் சிகிச்சைக்காலத்தில் கல்வியை தொடர்ந்து வெற்றிகரமாக கற்றுக்கொண்டு தமிழ்வாணன் என்ற மாணவர் எழுதிய அவரது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார்.

இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தினால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாட உள்ளது என்றார். ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி உரிமைச் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 586 கோடி நிதி வழங்க வேண்டி உள்ளது. அதற்காக துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் நிதியை பெற வழக்கு தொடுக்க உள்ளோம்.

தேசிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் குறித்த கேள்விக்கு அவர்கள் எதற்காக நமக்கு நிதி கொடுக்கக் கூடாது என்றும் எப்படி நம்மை புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வைக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்கள். அதன் ஒருபடி தான் இது. பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் 20 தரவுகளில் 19 இல் நாம் முதலிடத்தில் உள்ளோம்….

குடியரசுத் துணைத்தலைவர் புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தாத மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறிய கருத்திற்கு நான் எழுதிய புதிய கல்விக் கொள்கை என்னும் மதயானை புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பிரச்சினை குறித்து தெளிவாக எழுதி உள்ளேன் வேண்டுமென்றால் துணை குடியரசு தலைவருக்கும் ஒரு பிரதியை நான் அனுப்பி வைக்கிறேன் என பதில் அளித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்..

Share.
Leave A Reply

Exit mobile version