தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கட்ந்த 50 ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்த இரண்டு பிரதான திராவிட கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இமாலய வெற்றியை பதிவு செய்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும் 118 இடங்களே என்பதே பெரும்பான்மை என்பதால் அதற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்புள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் சென்னை வர உத்தரவிட்ட விஜய், அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு வெற்றி வேட்பாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு, பெரும்பான்மை நிரூபிப்பபது குறித்து முடிவெடுக்க முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதற்கு முன்னதாக, தனது கட்சி தலைமை அலுவலமான பனையூரில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அதன்படி, அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அவர் மரியாதை செலுத்தினார்.
