நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த 20-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப் பிரியா தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் உறவினர்கள், குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலாவை முடித்துவிட்டு உதகையில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வருவதற்காக காரில் குடும்பத்துடன் வந்துள்ளனர். அப்போது காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால் கார் ஓட்டுநர் சாலையோரத்தில் இருந்த பக்கவாட்டில் இருந்த பாறை மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் பல் மருத்துவர் திவ்ய பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த மருத்துவர் திவ்யப்பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப்பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
